தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!

இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த நிலையிலும் வெளிநாட்டில் இருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பித் தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் மற்றும் அவரது உறவினருடன் சேர்ந்து கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் பி.காம் பட்டதாரியான இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த MA.Bed. படித்த சந்தன மாரியம்மாள் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பாலமுருகன் சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணம் முடிந்ததை தொடர்ந்து மனைவி சந்தன மாரியம்மாளை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்று அங்கேயே பாலமுருகன் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்துள்ளார்.‌

இந்நிலையில், 6 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் சிங்கப்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து சந்தன மாரியம்மாள் விட்டு விட்டு பிறகு பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்து பணத்தை தனது மனைவியிடம் கொடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி கிருபை நகரில் கணவன் பாலமுருகன் கொடுத்த பணத்தில் தனது பெயரில் ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு கட்டி சந்தனமாரி குடியிருந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

கணவன் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து மனைவிக்கு ரூபாய் 10 லட்சம் பணம் மற்றும் 50 பவுன் தங்க நகை செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சந்தனமாரிக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கி அதின் மூலம் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு வேலையை விட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலமுருகன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து மனைவியிடம் தனது மருத்துவச் செலவுக்காக தான் வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம் நகைகளை என்ன செய்தாய் என கேட்டுள்ளார். அதற்கு சந்தன மாரியம்மாள் கணவனுக்கு உரிய பதிலளிக்காமல் நகை மற்றும் பணத்தை தர மறுத்துள்ளார்.

மேலும் சந்தன மாரியம்மள் instagramல் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தததையும் பாலமுருகன் கண்டித்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சந்தன மாரியம்மாள் ஏற்கனவே தனது தாய் மாமனான காளிமுத்து என்பவரிடமும் இதேபோன்று நகைகளை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்தன மாரியம்மாளுக்கும், காளிமுத்துக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சந்தன மாரியம்மாளின் தம்பி காளிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுத்தொடர்பான வழக்கும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ளது.

இந்நிலையில் மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன் பாலமுருகன் மற்றும் தாய் மாமா காளிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து சந்தன மாரியம்மாளை தீர்த்துக்கட்ட எண்ணி இன்று இரவு கிருபை நகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே வந்த சந்தன மாரியம்மாளை கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மறைந்திருந்த கணவன் பாலமுருகன் மற்றும் தாய் மாமா காளிமுத்து ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.

இதைத் தொடர்ந்து பாலமுருகன் மற்றும் காளிமுத்து ஆகியோர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த கொலை சம்பவத்தில் மனைவியை வெட்டும் போது கணவன் பாலமுருகனுக்கு கையில் காயம் ஏற்பட்டதால் காவல்துறையினர் பாலமுருகனை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மனைவியை கணவன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.