மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தட்டில் காசு போடா சொன்னவர் நிர்மலா சீதாராமன் - கனிமொழி கருணாநிதி தாக்கு..!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று தனக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி - நாலு முக்கு ரோடு பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் உள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் கூறிய ஏதாவது ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றி இருக்கிறார்களா எனக் கேள்வி கேட்டார். 15 லட்சம் ரூபாயும் அக்கவுண்டில் வரவில்லை, வருடத்திற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் கொடுக்கவில்லை. வேலை கேட்டால் பகோடா போடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார், அதுவும் வேலைதான் என்கிறார்.
தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு வந்த போது ஒரு ரூபாய் நிவாரணம் கொடுக்கவில்லை, அணைத்து நிவாரணமும் கொடுத்தது நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கே வந்தார். வந்து மக்களைப் பற்றி எந்த கேள்வி கேட்கவில்லை மக்களுக்காக என்ன தேவை என்றும் கேட்கவில்லை.
மக்களுக்கு உணவு வேண்டுமா, நிவாரணம் வேண்டுமா என்பதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. இங்கு ஒரு பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்குச் சென்று நிதி அமைச்சர், அவ்வளவு மழை வெள்ளத்தில் கோவிலை சுற்றி சகதியாக இருக்கிறது என்று அதற்கு ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் செய்து, எல்லாம் அதிகாரி திட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு வந்தவர்களிடம் இனிமேல் இங்கே இருக்கக்கூடிய பூசாரியின் தட்டில் காசு போடுங்கள், கோவில் உண்டியல் காசு போடாதீர்கள் என்று சொல்லிட்டு போனார்கள். தமிழ்நாட்டிற்கு நிதி கொடுப்பார் என்று பார்த்தால் இன்றைக்கு வரைக்கும் ஒரு ரூபாய் நிதி வரவில்லை.
இந்திய எல்லையில் சீன அரசு ஒரு சில கிராமங்களை கைப்பற்றி விட்டதாக சீன மொழியில் அந்த பகுதிகளுக்கு வந்து பெயர் பலகை வைத்துவிட்டு இந்த இடத்தை நாங்கள் கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவே பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில் சீன நாட்டின் நடவடிக்கைக்கு எதிராக பிரதமர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்திய எல்லையையே காப்பாற்றுவதற்குப் பிரதமருக்கு முடியவில்லை. இது மக்களுக்கான ஆட்சி இல்லை.
நமது திமுக ஆட்சி வந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 20 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருந்து பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. சவக்கிடங்கு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது 30 லட்சம் ரூபாயில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தினசரி காய்கறி சந்தை சரி செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மழை வெள்ளத்தில் பொது ரயிலில் மக்களின் மாட்டிக்கொண்ட மக்களுக்கு உதவி செய்த மக்கள், இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள். நமது முதலமைச்சர் இந்த ஊர் மக்களின் மகத்தான உதவியைப் பாராட்டினார்.