தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் கொடுத்த இளைஞர் கைது – திமுக மீது குற்றச்சாட்டு பரபரப்பு..!

தூத்துக்குடியில்  வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் கொடுத்த இளைஞர் கைது – திமுக மீது குற்றச்சாட்டு பரபரப்பு..!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டில் ஒரு இளைஞர் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட வள்ளிநாயகபுரம் 5வது தெரு பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் சில இளைஞர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வந்ததாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, கூட்டுறவு சார்பதிவாளர் பொன்மாரி தலைமையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்த பறக்கும் படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.

படையினரை கண்டதும் அங்கு இருந்த இளைஞர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அதில் ஒருவரை பறக்கும் படையினர் துரத்தி பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட இளைஞரை சோதனை செய்தபோது, அவரது உடமையில் ₹500 நோட்டுகளாக மொத்தம் ₹1,05,000 பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களின் பகுதி எண், வரிசை எண், பெயர் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு நோட்டும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தேர்தல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு வாங்கும் முயற்சிகள் குறித்து அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.