தொலைச்சி கட்டிருவேன்! நள்ளிரவில் ரெய்டு விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்! ஆடிப்போன செக் போஸ்ட் காவலர்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், தொலைச்சி கட்டிருவேன் என அங்கிருந்த காவலர் ஒருவரை எச்சரித்துச் சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் மனோ தங்கராஜ், தொலைச்சி கட்டிருவேன் என அங்கிருந்த காவலர் ஒருவரை எச்சரித்துச் சென்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜின் இந்த கோபத்துக்கு காரணம், இரவு நேரங்களில் கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான கனரக வாகனங்கள் கேரளாவுக்கு சென்றதேயாகும்.
கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து முறைப்படி உரிமம் உள்ளதா என்பதை பார்க்காமல் செக்போஸ்டில் இருந்த காவலர்கள் அதை அனுமதித்ததே அமைச்சரின் கடும் கோபத்துக்கு காரணமாகும். சென்னையிலிருந்து நேற்றிரவு திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அங்கிருந்து கார் மூலம் தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது அவரது காரை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கனிமவளங்களோடு குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்வதை கண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் டென்ஷன் ஆகியிருக்கிறார். காரை சைடு வாங்க முடியாத அளவுக்கு எதிர்திசையில் எறும்புக்கோடு போல் லாரிகள் வரிசைக்கட்டி வந்திருக்கின்றன. இதனால் பொறுமையிழந்த அமைச்சர் மனோ தங்கராஜ் நள்ளிரவில் களியக்காவிளை செக் போஸ்டுக்கு சென்று அங்கிருந்த காவலரிடம் இது குறித்து விசாரித்தார்.
செக் போஸ்டில் இருந்த காவலர் மழுப்பலாக ஏதோ பதில் சொல்ல, அமைச்சருக்கு மேலும் கோபம் அதிகரித்தது. எத்தனை வண்டி போகுது, இப்போதே நான் 50 வண்டிகளை பார்த்துவிட்டேன், தொலைச்சி கட்டிருவேன் தம்பி என அங்கிருந்த காவலரிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது கோபத்தை கொட்டித் தீர்த்தார்.
மேலும், எஸ்.பி.கிட்ட சொல்லி கனரக வாகனங்களை நிறுத்தச் சொல்லு என அங்கிருந்த தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டார். அமைச்சரின் திடீர் ரெய்டால் கனரக வாகனங்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டு அதிகாலை 4 மணி முதல் கேரளவுக்கு படையெடுத்தன.