யார் முதலில் செல்வது? அரசு பஸ் ஊழியர்கள் வாக்குவாதம்... பயணிகள் பரிதவிப்பு!!
கோவில்பட்டி பஸ் நிலையத்தில் யார் முதலில் செல்வது? என்று அரசு பஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நேற்று இரவு கோவில்பட்டியில் இருந்து கோவைக்கு செல்ல தயாராக இருந்த கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு போக்குவரத்து பணிமனைகளை சேர்ந்த இரண்டு அரசு பஸ்கள் இடையே யார் முதலில் பயணிகளை ஏற்றி செல்வது என்று போட்டி ஏற்பட்டு இரு பஸ்களில் உள்ள நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் எந்த பஸ்ஸில் ஏறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்து காவலர்கள் இருதரப்பையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்து இரு பஸ்களும் பயணிகளை ஏற்றுக் கொண்டு கிளம்பின.
இதேபோன்று கோவில்பட்டியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றில் கயத்தார் வில்லிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் ஏறி இருந்தனர். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ் கிளம்பி இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் பகுதி வந்தபோது வில்லிசேரியில் பஸ் நிற்காது, கயத்தாறு ஊருக்குள் பஸ் செல்லாது என்று கூறி பஸ்ஸில் இருந்த கயத்தார் மற்றும் வில்லிசேரி பயணிகளை இறக்கி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் நடத்துனருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறக்கிவிடப்பட்ட பயணிகளை வேறு அரசு பஸ் மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது