திருச்செந்தூரில் மீன் வலை பின்னும் கூடத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.30 லட்சம் வலைகள் எரிந்து நாசம்!

திருச்செந்தூரில் மீன் வலை பின்னும் கூடத்தில் பயங்கர தீ விபத்து – ரூ.30 லட்சம் வலைகள் எரிந்து நாசம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் உள்ள மீன் வலை பின்னும் கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 25 ஃபைபர் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள மீன் வலை பின்னும் கூடத்தில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவெனப் பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், கூடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் முழுவதும் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியிலும், பொருளாதார இழப்பிலும் சிக்கியுள்ளனர்.

சமூக விரோதிகள் மீது மீனவர்கள் சந்தேகம்

இரவு நேரங்களில் ஜீவா நகர் பகுதியில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு அடிக்கடி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்திற்குப் பின்னணியில் சமூக விரோதிகளின் சதிச்செயல் இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனவே, தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும்; சமூக விரோதிகளின் தொடர்பு இருந்தால் அவர்களை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தீ விபத்தில் வாழ்வாதாரத்திற்குத் தேவையான மீன்பிடி வலைகளை இழந்துள்ள மீனவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.