தூத்துக்குடி காவல்துறையில் புதிதாக 2 மோப்ப நாய்கள் பணி சேர்ப்பு

தூத்துக்குடி காவல்துறையில் புதிதாக 2 மோப்ப நாய்கள் பணி சேர்ப்பு

தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையின் துப்பறியும் பிரிவில், குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறியும் பணிக்காக புதிதாகப் பயிற்சி அளிக்கப்பட்ட 2 மோப்ப நாய்கள் முறைப்படி பணியில் சேர்க்கப்பட்டன.

குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் தடயங்களை மோப்பம் பிடித்துக் கண்டறிதல், வெடிகுண்டுகள் மற்றும் போதைப்பொருள்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பணிகளில் மோப்ப நாய்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் பிரிவுக்கு கூடுதல் நாய்கள் தேவைப்பட்டதையடுத்து, கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி 2 நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டு மோப்ப நாய் படையில் ஒப்படைக்கப்பட்டன. அவற்றுக்கு ‘ரிக்கி’ மற்றும் ‘தாமிரா’ எனப் பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய் பயிற்சிப் பள்ளியில் இரு நாய்களுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ரிக்கி மற்றும் தாமிரா ஆகிய இரு மோப்ப நாய்களும் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டு பணியில் இணைக்கப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முன்னிலையில், ஒரு மோப்ப நாய் குற்றச் சம்பவங்களைக் கண்டறியும் பணிக்காகவும், மற்றொரு மோப்ப நாய் போதைப்பொருள்களைக் கண்டறியும் பணிக்காகவும் சம்பந்தப்பட்ட மோப்ப நாய் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், ரிக்கி மற்றும் தாமிரா ஆகிய இரு மோப்ப நாய்களுக்கும் தொடர்ந்து சிறப்பான முறையில் பயிற்சி அளித்து, முறையாகப் பராமரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பிரிவு காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.