தூத்துக்குடியில் விபத்து நடந்த நிலா சீ புட்ஸ் ஆலையில் அமைச்சர் சி.வி கணேசன் ஆய்வு!
தூத்துக்குடியில் விபத்து நடந்த நிலா சீ புட்ஸ் ஆலையை அமைச்சர் சி.வி கணேசன் ஆலை ஆய்வு செய்தார். இது முழுக்க முழுக்க மின் கசிவால் ஏற்பட்ட விபத்து. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், புதூர் பாண்டியாபுரம் எட்டயபுரம் சாலையில் உள்ள நிலா சீ புட்ஸ் மீன் பதப்படுத்தும் ஆலையில் நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் Individual Quick Frozen Zone-ல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் உருவான புகையினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்றுநேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பழ வகைகளை வழங்கினார்கள்.பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள மீன் பதப்படுத்தக்கூடிய நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டு அதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக புகை மண்டலம் ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டதால் தூரமாக ஓடியுள்ளனர். அதிகமாக புகை வரும்போது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் 3 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 8 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். மீதியிருக்கக்கூடிய 23 பேரில் ராஜேஷ் திலக் மருத்துவமனையில் 17 பேரும், ஏ.வி.எம். மருத்துவமனையில் 6 பேரும் இருக்கிறார்கள். அவர்களும் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள்ளாக சிகிச்சை முடிந்து செல்வார்கள். அம்மோனியா வாயு கசிவுக்கு வாய்ப்பு இல்லை. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறோம்.
விசாரணை மேற்கொண்டதில் இந்த நிறுவனத்தில் முறையாக தொழிலாளர்களை பாதுகாத்து வருவதாகவும், விபத்து நடந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தினருடன் சேர்ந்து முழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஒரிசாவை சேர்ந்த 16 தொழிலாளர்கள், அசாமை சேர்ந்த 2 தொழிலாளர்கள், மீதமுள்ள 13 தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். இது முழுக்க முழுக்க மின் கசிவால் ஏற்பட்ட விபத்து. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளார்கள் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து புதூர் பாண்டியாபுரம் எட்டயபுரம் சாலையில் உள்ள நிலா சீ புட்ஸ் மீன் பதப்படுத்தும் ஆலையில் உள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் ஐனெiஎனைரயட ஞரiஉம குசழணநn ணுழநெ-ல் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேழ்கர் சுப்ரமண்ய பால்சந்தரா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ம.பிரபு (தூத்துக்குடி), ஜேன் கிறிஸ்டி பாய் (கோவில்பட்டி), ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ரமேஷ், இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) சரவணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்
.