தூத்துக்குடியில் சைக்கிளில் வந்து அதிரடி காட்டும் எஸ்பி: பொதுமக்கள் பாராட்டு!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சைக்கிளில் ரோந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் சைக்கிளில் வந்து அதிரடி காட்டும் எஸ்பி: பொதுமக்கள் பாராட்டு!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் எல். பாலாஜி சரவணன் சைக்கிளில் ரோந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சாதாரண உடையணிந்து சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக கையில் மண்வெட்டி கணையுடன் திரிந்தவரை பிடித்து விசாரணை செய்தார். பின் அவரை தென்பாகம் காவல் நிலையத்திற்கு அனுப்பி, அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அவ்வாறு ரோந்து சென்றவர் திடீரென தென்பாகம் காவல் நிலையத்திற்கு சென்று ஆவணங்களையும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும் காவல் நிலையம் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளனவா எனவும் பார்வையிட்டு அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று காவல்துறையினர் சரியாக பணி செய்கிறார்களா என்பது குறித்தும், சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று அதிகாலையில் சைக்கிளில் புறப்பட்ட அவர், குறுகிய சந்து உட்பட பல பகுதியில் திடீரென ஆய்வு செய்தார். இது காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.