தூத்துக்குடி: கடன் பணம் கேட்டு புரோட்டா கடை உரிமையாளரை காரில் கடத்தி தாக்குதல் – நிதி நிறுவன அதிபர் உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடி: கடன் பணம் கேட்டு புரோட்டா கடை உரிமையாளரை காரில் கடத்தி தாக்குதல் – நிதி நிறுவன அதிபர் உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில் வாங்கிய கடனை திருப்பி தர மறுத்ததால் புரோட்டா கடை உரிமையாளரை காரில் கடத்தி தாக்கிய சம்பவத்தில், நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி சுந்தரராமபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவஹர் சாதிக் (40) என்பவர் அப்பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். தொழிலை விருத்தி செய்வதற்காக, அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்த சங்கர் (43) என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்திலிருந்து லட்சக்கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடனை நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தாமல், வட்டியும் வழங்காமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நிதி நிறுவன அதிபர் சங்கர், கார் டிரைவர் பேச்சிமுத்து மற்றும் நிதி நிறுவன ஊழியர்களான அத்திமரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (34), சுந்தரராமபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாரிமுத்து (43) ஆகியோர் காரில் சென்று ஜவஹர் சாதிக்கிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால், அவரை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவஹர் சாதிக்கையை மீட்டனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, நிதி நிறுவன அதிபர் சங்கர், கார் டிரைவர் பேச்சிமுத்து மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.