அதிகாலை நடைபயிற்சி சென்ற விவசாயி மீது டிப்பர் லாரி பாய்ந்தது... 3 மகள்களின் தந்தை பலி! ஓட்டுநர் தலைமறைவு!

அதிகாலை நடைபயிற்சி சென்ற விவசாயி மீது டிப்பர் லாரி பாய்ந்தது... 3 மகள்களின் தந்தை பலி! ஓட்டுநர் தலைமறைவு!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அதிகாலை நடைபயிற்சிக்குச் சென்ற விவசாயி மீது டிப்பர் லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்துள்ள நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் நாகராஜ் (65) விவசாயியாக இருந்து வந்தார். தினமும் அதிகாலை தனது கிராமத்திலிருந்து மதுரை–நெல்லை நான்குவழிச்சாலை சந்திப்பு வரை நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதன்படி நேற்று அதிகாலையும் நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வில்லிசேரி பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் எம்.சாண்டு லோடை இறக்கிவிட்டு கயத்தாறு நோக்கி வந்த டிப்பர் லாரி, நான்குவழிச்சாலை சந்திப்பு அருகே எதிர்பாராத விதமாக நாகராஜ் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர், விபத்து நடந்தவுடன் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு காவல் நிலைய போலீஸார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மரணத்தை விளைவித்தல் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த நாகராஜுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து சம்பவம் வில்லிசேரி மற்றும் கயத்தாறு பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.