நெல்லை கவின் படுகொலை- கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் சிறையிலடைப்பு!

தமிழகத்தை உறையவைத்துள்ள நெல்லை கவின் செல்வகணேஷ் ஜாதி ஆணவப் படுகொலை (Kavin- Caste Honour Killing Case) வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவணனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஐடி பணியாளரான கவின் மற்றும் சுபாஷிணி ஆகிய இருவரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷிணி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் கவின் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கவினை படுகொலை செய்ததாக சுபாஷிணியின் தம்பி சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். சுர்ஜித் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் சுர்ஜித்தின் தந்தை சப்- இன்ஸ்பெக்டர் சரவணன், தாய் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் கவின் கொலை வழக்கில் இருவரும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கவின் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் இன்று ஜூலை 30-ந் தேதி இரவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சரவணனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் சரவணன், நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார், சரவணனை ஆகஸ்ட் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.