“நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் – ஜனநாயக படுகொலை; மோசமான மத்திய பட்ஜெட்” : தூத்துக்குடியில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் விமர்சனம்

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் – ஜனநாயக படுகொலை; மோசமான மத்திய பட்ஜெட்” : தூத்துக்குடியில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் விமர்சனம்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், இது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட விஷயங்கள் மட்டுமே பேச வேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் இணைந்து வாய்ப்பூட்டு போடுகின்றனர். இதனை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினார்.

மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த அவர், “இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான நிதிநிலை அறிக்கையாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. எந்த ஒரு மக்களுக்கும் எந்தவித நன்மையும் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விஜய் மட்டும் பட்ஜெட் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ‘அடுத்த முதல்வர்’ என பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் நாட்டின் நிதிநிலை அறிக்கையைப் பற்றி பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?” என கேள்வி எழுப்பினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக அவர் கூறுகையில், “100 நாள் வேலை 125 நாட்களாக வழங்கப்படும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான குறைந்தபட்சம் 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் வெறும் 95 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் 25 நாட்கள் வேலை மட்டுமே வழங்க முடியும். இந்த நிலைமையில் 150 நாட்கள் வேலை வழங்குவோம் என அதிமுக வாக்குறுதி அளிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்” என்றார்.

மேலும், “இந்த நிதி ஒதுக்கீடு குறைவுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை. ஆகவே பாஜக – அதிமுக இணைந்து கிராமப்புற மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன” என குற்றம்சாட்டினார்.

வரும் 6ஆம் தேதி சென்னையில் கன்னிமாரா நூலக வளாகத்தில் காரல் மார்க்ஸ் சிலை திறந்து வைக்கப்படும் என்றும், சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் வெகுஜன வசூல் மற்றும் தேர்தல் நிதியளிப்பு அரசியல் விளக்க சிறப்பு பேரவை கூட்டம் மாசிலாமணி புரத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர் பூ.மயில், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.