தென் மாவட்டங்களை குறிவைக்கும் பழனிசாமி? – தேவேந்திர குல வேளாளர் அமைப்புடன் கூட்டணி பேச்சு, ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்பு!

தென் மாவட்டங்களை குறிவைக்கும் பழனிசாமி? – தேவேந்திர குல வேளாளர் அமைப்புடன் கூட்டணி பேச்சு, ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்பு!

2026 சட்டமன்ற  தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது அரசியல் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் மறைந்த பிறகு, அவரது மகள் சந்தனப்பிரியா அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலராக செயல்பட்டு வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்திருந்தார்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் அந்த அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதால், சந்தனப்பிரியாவை அழைத்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் அந்த அமைப்பு இணைய முன்வந்துள்ளதாகவும், அதற்காக ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்குவதற்கான வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் அதிகமாக உள்ள நிலக்கோட்டை அல்லது ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்சிகளை கூட்டணியில் இணைத்து தனது கூட்டணியை வலுப்படுத்துவது போல, அதிமுக – பாஜக கூட்டணியையும் வலுப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர அரசியல் அமைப்புகளையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தனர்.

இதற்காக தமிழகத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு கொண்ட அனைத்து அமைப்புகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு கட்சியினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை அதிமுக கூட்டணியில் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் முன்னெடுப்பின் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுக தனது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் திட்டத்தில் உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.