“சட்டம் எல்லோருக்கும் ஒன்றா?” – கொடி கம்பங்களுக்கு நடைபாதை உடைத்த சம்பவம் - உதயநிதி வருகை அலங்காரத்தில் புதிய சர்ச்சை

“சட்டம் எல்லோருக்கும் ஒன்றா?” – கொடி கம்பங்களுக்கு நடைபாதை உடைத்த சம்பவம் - உதயநிதி வருகை அலங்காரத்தில் புதிய சர்ச்சை

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் அவரை வரவேற்கும் வகையில் விரிவான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

சத்யா ரெஸ்டாரண்ட் தொடங்கி நகரின் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் திமுக கொடிகள் கட்டப்பட்டு, வரவேற்பு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது வரை அனைத்தும் வழக்கமான அரசியல் வரவேற்பாக இருந்தாலும், அதனுடன் தொடர்பாக நடந்துள்ள ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி நகரில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மாநகராட்சி அலுவலகம் முதல் குருஸ் பெர்னாந்து சிலை வரை பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில், மாநகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அந்த நடைபாதையில் உள்ள பேவர் பிளாக் கற்கள் மிஷின் மூலம் உடைக்கப்பட்டு, அதன் உள்ளே இரும்பு ராடுகள் பதிக்கப்பட்டு பைப் பொருத்தி அதில் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதை சில இடங்களில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த சாரு ஸ்ரீ பணியாற்றிய காலத்தில்,

அண்ணா நகர் பகுதியில் நடைபாதை கல் உடைத்த பந்தல் உரிமையாளருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல் வி.இ.ரோட்டில் ஒரு ஹோட்டல் உரிமையாளர் நடைபாதை கல் உடைத்து பைப்லைன் பதித்ததற்காக அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சில கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை கற்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில்,

இதற்கு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

யார் மீது புகார் அளிக்கப்படும்?

சேதமான நடைபாதைக்கு இழப்பீடு தொகை யாரிடமிருந்து வசூலிக்கப்படும்?

என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

“சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்” என்பதை மாநகராட்சி நிர்வாகம் நிரூபித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கிடையில் தூத்துக்குடி மக்களிடையே ஒரு காமெடி கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது:

???? “நடைபாதை மக்கள் நடக்கதானா… இல்ல கொடி நிக்கதானா?”