தூத்துக்குடி ஈ.சி.ஆர் சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

தூத்துக்குடி ஈ.சி.ஆர் சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

கிழக்கு கடற்கரை சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் எல்லாம் வடிந்துள்ளது. 14ஆம் தேதி இரவு நிலவரப்படி மாவட்டத்தில் 474 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. 

நேற்றையதினம் 292 இடங்களாக இருந்தது, இன்றையதினம் 100 இடங்களுக்கும் கீழ் குறைவாகவே உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு சில வார்டுகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையாக மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை 100க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் மூலமாக பங்கிள் ஓடையில் வெளியேற்றப்பட்டு கடலில் கலப்பதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 14ஆம் தேதி பொறுத்தமட்டில், எட்டு இடங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. 

இதில் நேற்றைய தினம் ஒரு சாலையில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அனைத்து சாலைகளும் சரியாகி உள்ளது. ஏரல் தரைப்பாலத்தின் வழியாக தாமிரபரணி ஆற்றிக்கு செல்லக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மருதூர் அணைக்கட்டுக்கு இன்று வரக்கூடிய தண்ணீரின் அளவு 5648 கனஅடியாகவும், அதுபோன்று, திருவைகுண்டம் அணைக்கட்டுக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு 10370 கனஅடியாகவும் உள்ளது. ஏரல் தரைப்பாலத்தின் வழியாக அதிகளவில் வெள்ளநீர் சென்றதால் தரைப்பாலத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை நெடுஞ்சாலைத்துறை மூலமாக தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் சரிசெய்து விடுவார்கள். நிரந்தரமாக சரிசெய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக தண்ணீர் வரத்து வந்து கொண்டிருந்தது, கோரம்பள்ளம் குளத்தின் நீரின் அளவினை சீரான நிலையில் பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் 1.85 மீட்டர் முதல் 1.9 மீட்டர் வரை தண்ணீரை நிறுத்தி பராமரிக்கப்பட்டது. 

இப்போது மழை நின்ற காரணத்தினால் விவசாய பயன்பாட்டிற்காக கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க வேண்டுமென்பதால் 1.12 மீட்டர் வரைக்கு தண்ணீர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கோரம்பள்ளம் குளத்தை பொறத்தவரை அதிகபட்சமாக 19200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் கோரம்பள்ளம் குளத்திலிருந்து தண்ணீர் திறக்கவில்லை. கோவில்பட்டி, கடம்பூர் பகுதிகளில் உள்ள இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது. 

ஏரல் தரைப்பாலத்தையும் இன்னும் சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து செல்வதற்கு வழிவகை செய்யப்படும். இதுவரை பெய்த மழையின் காரணமாக ஒட்டுமொத்தமாக 212 குடிசை வீடுகள் சிறிதளவும், 05 குடிசை வீடுகள் முழுமையாகவும், பட்டா வீடுகள் என மொத்தம் 225 வீடுகள் சேதமடைந்துள்ளது. கால்நடைகள் பாதிப்பை பொறுத்தவரையில் 01 பசு மாடு, 41 ஆடுகள், கோழிப்பண்ணையில் 10 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளது. குளங்கள் மற்றும் ஏரிகளில் உடைப்பு எதுவும் ஏற்படவில்லை. பெரிய பிராட்டி குளத்தில் மட்டும் மறுகால் பாய்ந்து உடைப்பு ஏற்பட்டது. 

மற்ற குளங்கள் எல்லாம் நிறைந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களுக்கு மழைநீர் சூழ்ந்தது. நேற்று மாலை முதலே விவசாய நிலங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடியத்தொடங்கியது. இன்று முழுமையாக வடிந்துள்ளது, குளங்களில் தண்ணீர் இருப்பை பொறுத்தவரை 200க்கும் மேற்பட்ட குளங்களில் 95 சதவிகிதத்திற்கு அதிகமாகவும், 80 குளங்களுக்கு மேல் 100 சதவிகிதம் நிறைந்துள்ளது. மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டுகளிலிருந்து தண்ணீர் பெறக்கூடிய அனைத்து குளங்களிலும் 95 சதவிகிதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது. 

அதுமட்டும்மல்லாமல், கால்வாய் பாசனம் இல்லாத 180 குளங்களில் 50 முதல் 60 சதவிகிதம் அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் மழையளவை பொறுத்தவரையில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து அதிகபட்சமாக 150 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. வருடாந்திர சராசரி மழையளவில் இன்னும் 120 மி.மீட்டர் அளவிற்கு மழை கிடைக்க வேண்டும். ஆத்தூர் பாலத்தில் நேற்று முதலே போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு கடற்கரை சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுபட்டுவிடக்கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.