தூத்துக்குடியில் ரூ.50லட்சம் கணினி உதிரி பாகங்கள் பறிமுதல்: சுங்கத்துறை நடவடிக்கை!
தூத்துக்குடியில் உரிய வரி கட்டாமல் இறக்குமதியில் ஈடுபட்டதாக, ரூ.50 லட்சம் மதிப்பிலான கணினி உதிரிபாகங்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதை சுங்கத் துறை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில் துபை நாட்டு ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னரில் நான்குனேரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கணினிகள் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அந்த கண்டெய்னா் சோதனைக்கு பின்னா் நான்குனேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து அந்த கண்டெய்னரை மும்பைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் தூத்துக்குடி சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தூத்துக்குடி சுங்கத்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையா் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று அந்த கண்டெய்னரை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனா்.
பின்னா் அந்த கண்டெய்னரை ஆய்வு செய்த போது, அதில் புதிய கணினிக்கு பதிலாக பழைய கணினி உதிரி பாகங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.50 லட்சம் இருக்கும் எனவும், இவற்றை வரிவிலக்கு பெறும் வகையில், கடத்தி வந்து இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அந்த கண்டெய்னரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.