"காற்றாலையில் மின்சாரம் தாக்கி சீனியர் இன்ஜினியர் பலி... உடலை வாங்க மறுத்த குடும்பம்! சுஸ்லான் அலுவலகம் முற்றுகை"

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மணிவண்ணன், காற்றாலை பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகேயுள்ள வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக இருந்து கடந்த 15 ஆண்டுகளாக சுஸ்லான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்த அவர், அண்மையில் திருநெல்வேலி பகுதியில் உள்ள காற்றாலை பராமரிப்பு பணிக்காக மாற்றப்பட்டிருந்தார்.

நேற்று உமரிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள காற்றாலை ஒன்றில் பழுது நீக்கும் பணியில் மணிவண்ணன் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் மேலும் ஐந்து பணியாளர்கள் பணியில் இருந்த நிலையில், மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மணிவண்ணன் உயிரிழந்தது குறித்து நிறுவன நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என கூறிய மணிவண்ணனின் மனைவி நர்மதா, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மணிவண்ணன் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சம்பவத்தின் உண்மை நிலையை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும், குடும்பத்தின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மேல லட்சுமிபுரத்தில் உள்ள சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணியாச்சி டிஎஸ்பி அஜுகுமார் தலைமையிலான காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், உரிய நீதி மற்றும் இழப்பீடு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என குடும்பத்தினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இதனால் சுஸ்லான் நிறுவன அலுவலகம் முன்பு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.