தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக சிலம்பரசன் பொறுப்பேற்பு - ஆட்சியருடன் சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக சிலம்பரசன் பொறுப்பேற்பு - ஆட்சியருடன் சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமைக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் வெள்ளிக்கிழமை ரகசியமாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான ஆவனங்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் சனிக்கிழமை  அவர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு வருவார் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மதியம் 1  மணிவரையில் எஸ்பி அலுவலகத்திற்கு வரவில்லை. 

இதனால் அவரது வருகைக்காக பத்திரிக்கையாளர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1  மணி வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். பின்னர் 2 மணிக்கு  வந்ததுடன் ஆட்சியர் இளம்பகவத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவர் அடுத்த வாரம் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டுகளை விடவும் இந்த 2025ம் ஆண்டு கொலை சம்பவங்களும், கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களும் கூடுதலாக நடந்து அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எஸ்பியுடனான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நிறுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் புதிய எஸ்பியின் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படகாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.