திருச்செந்தூர் கோவிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை... மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி எச்சரிக்கை!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது - மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை....

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது - மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை.
சர்ப்பக் காவடி சிறப்பு
முருகப்பெருமானுக்கு பக்தர்கள் வேண்டிக்கொண்டு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பகாவடி, மச்சக்காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, கரும்புத் தூளி காவடி என பல காவடிகள் சுமக்கின்றனர். இதில் சர்ப்பக்காவடி சிறப்பானது. நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும். இந்த சர்ப்பக் காவடி முன்னாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நிறையவே வரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கை.
இந்நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்திற்கு புறம்பாக சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.