ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வந்த சிறப்பு ரயில்! 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் – ரயில்வே போலீஸ் அதிரடி

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வந்த சிறப்பு ரயில்! 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் – ரயில்வே போலீஸ் அதிரடி

ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த சிறப்பு ரயிலில் 10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து ரயில்வே தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் கஞ்சா கடத்தல் – போலீசாருக்கு ரகசிய தகவல்

ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கடந்த சில வாரங்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே தனிப்படை போலீசார் அந்த ரயிலில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.

சாத்தூர் – மணியாச்சி இடையே அதிரடி சோதனை

நரசாபூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சிறப்பு ரயிலில் சாத்தூர் – மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையில் காவலர்கள் மாரித்துரை, கருப்பசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர் ரயிலின் பொதுப் பெட்டிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உரிமையாளரின்றி கிடந்த நீல நிறப் பை

அப்போது பொதுப் பெட்டியில் உரிமையாளரின்றி சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த நீல நிறப் பை ஒன்றை போலீசார் கண்டனர்.

அந்தப் பையை சோதனையிட்டபோது, அதற்குள் 5 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை கடத்தி வந்தது யார்?

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதனை தூத்துக்குடிக்கு கடத்தி வந்தவர்கள் யார்? ரயிலில் எந்த இடத்தில் ஏற்றப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரயிலில் கஞ்சாவை விட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு வந்த ரயிலில் 10.5 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.