அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு: 22ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு: 22ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது அவர், வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

மேலும், 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இவ்வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது இதன் காரணமாக இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. 

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்டத்தை நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் இன்று விடுப்பில் சென்றுள்ளதால் மாவட்ட நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் வழக்கை விசாரணை செய்தார். விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகததால் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.