“விஜயால் தான் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவில்லை – நடிகர்களை நம்பி வாழ்க்கையை தொலைக்காதீர்கள்” : தூத்துக்குடியில் பி.டி.செல்வகுமார் கடும் தாக்கு

தூத்துக்குடியில் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்த அவரது முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார். ‘ஜனநாயகன்’ படம் வெளியாகாததற்கு விஜயே காரணம், நடிகர்களை நம்பி வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகர் விஜயை, அவரது முன்னாள் மேலாளரும் ‘புலி’ திரைப்பட தயாரிப்பாளரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான பி.டி.செல்வகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜயின் அரசியல் செயல்பாடுகள், திரைப்பட விவகாரங்கள் மற்றும் அவரது சுற்றத்தினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் பேசுகையில்,

“சில்க் சுமிதா, கவுண்டமணி, செந்தில், வடிவேல், த்ரிஷா வந்தாலும் கூட்டம் கூடும். கூட்டம் வருவது அரசியல் வெற்றிக்கு அளவுகோல் அல்ல” எனக் கூறினார்.

???? ‘ஜனநாயகன்’ படம் குறித்து:

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாததற்கு முழுக்க முழுக்க நடிகர் விஜயே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்த நிலையில், சென்சார் தொடர்பான பிரச்சினையை படக்குழு சரி செய்திருக்க வேண்டும் என்றும்,

“பழி போடுவது ஈசி; ஆனால் திமுகவுக்கும், மத்திய அரசுக்கும், சென்சாருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என விளக்கினார்.

மேலும்,

“ஆர்கே செல்வமணி படம், ‘விஸ்வரூபம்’ போன்ற பல படங்கள் பிரச்சினைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. பிரச்சினையை தீர்த்த பின்பே வெளியீட்டு தேதி அறிவிக்க வேண்டும்” என்றார்.

???? நடிகர்களை நம்பி வாழ்க்கை தொலைப்பது குறித்து:

“நடிகர்களை நம்பி போய் பலர் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். படம் வெற்றி பெற்றால் புகழ் நடிகருக்கே; பிரச்சினை வந்தால் நடிகர் பொறுப்பேற்க மாட்டாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

“நடிகர்கள் பின்னால் யாரும் போகாதீர்கள்” எனவும் அவர் எச்சரித்தார்.

????‍????‍???? விஜயின் சுற்றத்தார் குறித்து:

“பக்குவமான, நல்லவர்களை விஜய் அருகில் வைத்திருக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக கொள்ளையடித்தவர்களை (ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள்) உடன் வைத்தால் கட்சி எப்படி வளரும்?” என கடுமையாக விமர்சித்தார்.

⚖️ கரூர் மாநாடு, 41 பேர் மரணம்:

கரூரில் நடந்த மாநாட்டில் ஏற்பட்ட சம்பவத்திற்கு நடிகர் விஜய் தான் பொறுப்பு என கூறிய பி.டி.செல்வகுமார்,

“ஜெயலலிதா இருந்திருந்தால் விஜயை கைது செய்திருப்பார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் கரிசனம் காட்டியுள்ளார்” என்றார்.

????️ அரசியல் குற்றச்சாட்டு:

அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணிக்கு வராததால் தற்போது விஜய்க்கு எதிராக பேசுகின்றன என்றும், இது சுயநல அரசியல் என்றும் குற்றம்சாட்டினார்.

???? பப்ளிசிட்டி அரசியல்:

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் சென்ற விஜய், மதுரை மாநாட்டில் இறந்தவர்களின் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? பப்ளிசிட்டி தேவைப்பட்டால் எங்கும் செல்வார்” எனவும் விமர்சனம் செய்தார்.