மாப்பிள்ளையூரணியில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவிலை வட்டாட்சியர் திறந்து வைத்தார்!
மாப்பிள்ளையூரணியில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவிலை வட்டாட்சியர் திறந்து வைத்தார்!
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் கோவிலை தாசில்தார் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் மாப்பிள்ளையூரணி ஊர்பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கும், அதே கோவிலில் மற்றொரு தரப்பினருக்கும் கோவில் நிர்வாகம் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக, யார் கோவில் நிர்வாகத்தை நடத்துவது என்ற ஈகோ பிரச்சனை ஏற்பட்டதின் காரணமாக, சுமார் 4 மாதங்களுக்கு முன் கோவில் மூடப்பட்டது.
இதனால் கோவில் வரிதாரர்கள், மாப்பிள்ளையூரணி கிராம பொதுமக்கள் தரிசனம் செய்ய வழியின்றி சிரமப்பட்டு வந்தனர். இதுசம்பந்தமாக, அவ்வூரைச் சேர்ந்த வரிதாரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் சப்-கலெக்டர் கௌரவ குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கோவிலை திறப்பது என்று பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரிதாரர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மூடப்பட்டிருந்த கோவிலை தாசில்தார் பிரபாகர் திறந்து வைத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் தலைவர் பெத்து பாலமுருகனிடம், அதற்கான உத்தரவு நகலையும் வழங்கினார்.
இதனையடுத்து, வரிதாரர்கள், பொதுமக்கள், அதே பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பத்திரகாளியம்மன் கோவிலுக்குள் திரளான பக்தர்கள் உள்ளே நுழைந்தனர். இதனை முன்னிட்டு பல்வேறு வகையான வான வேடிக்கைகள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் சரவண வேல்ராஜ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.