வணிக வளாக கட்டிடம் இடிந்து காவலர் படுகாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தமிழ் சாலையில் ராஜாஜி பூங்கா எதிரே மணிநகர் பகுதியில் முத்துக்குவியல் நிறுவனத்திற்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகத்தின் மேற்கூரை சேதம் அடைந்து இருந்த நிலையில் இன்று மாலை திடீரென மேற்கூரை மற்றும் கைப்பிடி சுவர் ஆகியவை இடிந்து கீழே விழுந்தது. இதில், அந்த கட்டிடத்தில் கீழே உள்ள ஜெராக்ஸ் கடையில் நகல் எடுப்பதற்காக வந்து நின்று கொண்டிருந்த ஹைவே பேட்ரோலில் பணிபுரியும் காவலர் ஸ்டாலின் என்பவர் தலையில் கற்கள் விழுந்தது. இதில், தலையில் பலத்த காயத்துடன் ரத்த சொட்ட, சொட்ட காவலர் ஸ்டாலின் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டார்.
இதனையடுத்து மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணி நகர் சாலையை மக்கள் பயன்படுத்தாத வகையில் உடனடியாக மூடினர். இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் மக்கள் அடுத்த தெரு வழியாக செல்ல போலீசாரால் அறிவுறுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்தின் மின் இணைப்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.