ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசு திருட்டு... தூத்துக்குடியில் த.வெ.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உள்பட 6 பேர் கைது!

ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசு திருட்டு... தூத்துக்குடியில் த.வெ.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உள்பட 6 பேர் கைது!

தூத்துக்குடி: சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் திருடப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உள்பட 6 பேரை சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சீனப் பட்டாசுகளை கடந்த ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவை தூத்துக்குடி புதிய துறைமுகம்–மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் குடோனில் கண்டெய்னர் பெட்டியில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை அழிப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் குடோனுக்குச் சென்றபோது, கண்டெய்னரின் சீல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அளித்த புகாரின் பேரில், சிப்காட் காவல் ஆய்வாளர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், இந்தத் திருட்டில் தாளமுத்துநகர் பெரியசெல்வம் நகரைச் சேர்ந்த வழக்கறிஞரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி அமைப்பாளருமான ஜேசுதாஸ் (40) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஜெயகிருஷ்ணன் (30), இம்மானுவேல் (24), அனுஜித் ஜான்சன் (30), அந்தோணி ராஜேஷ் குமார் (42), சக்திவிஜய் (26), ஜேசுதாஸ் (40) ஆகிய 6 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.