“தவெக-விற்கு ஓட்டு போட்டீங்களே... தண்ணீர் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?” – தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நடுரோட்டில் பெண்கள் போராட்டம்!

“தவெக-விற்கு ஓட்டு போட்டீங்களே... தண்ணீர் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?” – தூத்துக்குடியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நடுரோட்டில் பெண்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, 44-வது வார்டு ஜார்ஜ் ரோடு பகுதி பொதுமக்கள் சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 44-வது வார்டு ஜார்ஜ் ரோடு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து வார்டு கவுன்சிலரிடம் பொதுமக்கள் முறையிட்டதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, “நீங்கள் தவெகவுக்குத்தானே ஓட்டு போட்டீர்கள்... பின்னர் தண்ணீர் மட்டும் ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்?” என கவுன்சிலர் அலட்சியமாக பதில் அளித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

???? “தேர்தல் தோல்விக்கு பழிவாங்குகிறார்களா?”பொதுமக்கள் கேள்வி!

மேலும், தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக தங்களது வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சில பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

“யாருக்கு வாக்களித்திருந்தாலும் குடிநீர் வழங்குவது மாநகராட்சியின் அடிப்படை பொறுப்பு. அரசியல் காரணங்களுக்காக குடிநீர் விநியோகம் பாதிக்கப்படக் கூடாது” என அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காலி குடங்களை சாலையில் வைத்து பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், தங்களது பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஓட்டு யாருக்கு போட்டாலும்... குடிநீர் கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு!” என்ற முழக்கம் தற்போது தூத்துக்குடியில் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.