“100 நாள் ஆட்சி மக்களுக்கு வேதனையான நாட்கள்” – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

“100 நாள் ஆட்சி மக்களுக்கு வேதனையான நாட்கள்” – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

“100 நாள் ஆட்சி என்பது மக்களுக்கு வேதனையான நாட்களாகவே நான் பார்க்கிறேன்” என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கர்நாடக முதல்வருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யாராக இருந்தாலும் ஒருவரின் உயிரைப் பறிப்பதற்கோ, சுட்டுக் கொல்வதற்கோ உரிமை கிடையாது. தமிழக பாஜக சார்பில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் தமிழக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன், “ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன். எல்லா அமைச்சர்களும் ‘வேலையை’ ஆரம்பித்துவிட்டனர். அதற்கான அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ‘வாங்க’ ஆரம்பித்துவிட்டனர். யார் யார், எங்கெங்கு வாங்குகிறார்கள் என்ற பட்டியல் எங்களிடம் இருக்கிறது. விரைவில் நாங்கள் வெளியிடுவோம்” என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, தமிழக அரசின் 100 நாள் ஆட்சி குறித்து பேசிய அவர், “100 நாள் ஆட்சி என்பது மக்களுக்கு வேதனையான நாட்களாகத்தான் நான் பார்க்கிறேன்” என தெரிவித்தார்.

அமைச்சர்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.