முள்ளக்காடு கடற்கரையில் நீர் சாகச விளையாட்டு சுற்றுலாதளம் அமையும் இடத்தில் 2 அமைச்சர்கள் ஆய்வு..!

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கோவளம் கடற்கரையில் நீர் சாகச விளையாட்டு சுற்றுலா தளம் அமைக்கப்படும் இடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) ஆய்வு செய்தனர்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் நகரத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நீர் சறுக்கு, சாகச விளையாட்டு சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள இங்கு வந்துள்ளோம். இன்னும் 2 மாதத்தில் அதற்கான ஆய்வு பணிகள் முழுமை பெற்று, அதனுடைய முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த பகுதியில் நீர் சறுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டு தளங்களும் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்" என தெரிவித்தார்.
ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜன், வட்ட செயலாளர் மேகநாதன், சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.