ஆந்திராவில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்... 2 ஆயிரம் கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்..!

ஆந்திராவில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்... 2 ஆயிரம் கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்..!

ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது, அந்த பகுதியில் அடுத்தடுத்து வந்த 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆந்திரா போலீசார் சோதனையிட்ட அந்த நான்கு கண்டெய்னர்களில் ரூ.2,000 கோடி பணம் சிக்கியுள்ளது. பின்னர், இந்த பணம் ஆர்பிஐ சொந்தமானது என்பது விசாணையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு பணத்தை கொண்டு சென்ற போது, கஜ்ரம்பள்ளியில் நடந்த வாகன சோதனையில் அப்பணம் சிக்கியது தெரிய வந்துள்ளது. விசாரணையில் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இருந்ததால், கொச்சி ரிசர்வ் வங்கியில் இருந்து ஹைதராபாத் ஆர்பிஐக்கு கன்டெய்னர்கள் செல்வது தெளிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, ஹைதராபாத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.500 கோடி, பெடரல் வங்கிக்கு ரூ.1,000 கோடி, எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.500 கோடி கொண்டு சென்றதாக ஆவணங்களை சரிபார்த்ததில் உறுதியானதால் லாரிகள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.