''பிட்புல் முதல் கங்கல் வரை''.. இந்தியாவில் 23 வகை வெளிநாட்டு நாய்கள் வளர்க்க தடை.. லிஸ்ட்ட பாருங்க
ஆசைக்காக வளர்க்கப்படும் வெளிநாட்டு நாய்கள் தாக்கி பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவில் 23 வகை வெளிநாட்டு நாய்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
வரலாற்றில் நாய்களுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான உறவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே நாய்களை நாம் பழக்கி வளர்க்க தொடங்கிவிட்டதாக மனிதக்குல வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இப்படியாக வளர்க்கப்பட்ட நாய்கள் தற்போது பல இனங்களாக விரிவடைந்திருக்கிறது. இதில் சில இனங்கள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.
குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்த பிட் புல், வுல்ஃப் டாக் போன்ற நாய் இனங்கள் கடந்த காலங்களில் ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில், ஜிம் பயிற்சியாளராக இருந்த அமித் என்பர் வளர்த்து வந்த பிட்புல் இன நாய் கடித்ததில், அரவது தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. பிட்புல் போன்ற வெளிநாட்டு நாய் இனங்கள் வளர்ப்பவர்கள் சொல்லை மட்டும்தான் கேட்கும். இதனால் அக்கம் பக்கத்தினர் மட்டுமல்லாது, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தாக மாறிவிடுகிறது.
எனவே இதனை தடை செய்ய வேண்டும் என்று தொடர் புகார்கள் எழுந்தது. இது குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நாய்கள் வளர்ப்பு குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 23 வகையான நாய்கள் இந்தியாவில் வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராட்வீலர், பிட்புல் டெரியர், டோசாஇனு, அமெரிக்கன் ஸ்டான்போர்ட்ஷைர் டெரியர், ஃபிலா பிரசிலியரோ, டோகோ அர்ஜண்டீனோ, அமெரிக்கன் புல்டாக், போஸ்பெல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேஷியன் ஷெப்பர்ட் நாய், தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் இன நாய், டார்ஞாக், வுல்ஃப் வகை நாய்கள், மாஸ்கோ கார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு ரக நாய்களை வாங்கவோ, விற்கவோ இனி உரிமம் வழங்கப்படாது.
ஏற்கெனவே இந்த நாய்களை வளர்த்து வருபவர்கள் அந்நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். இதில் கலப்பின நாய்களுக்கும் இது பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் இதுபோன்ற மூர்க்கமான நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.