கஞ்சா வழக்கில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 6பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கத்தி, வாள், 2பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு மட்டக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மட்டக்கடை நயினார் விளை வடக்குத் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் ஜெர்ஷன் (22) என்பதும் அவரிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி கேவிகே நகர் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் (25), அண்ணா நகர் 11வது தெரு சண்முகவேல் மகன் சத்தியசீலன் (22), திரவியபுரம் 5வது தெரு முத்துமானிக்கம் மகன் உமாபதி (21), பூபால்ராயர்புரம் 3வது தெரு கணேஷ் அப்புராஜ் மகன் பீட்டர் (23), முள்ளக்காடு சந்தோஷ் நகர் சந்திரபோஸ் மகன் ஹரி பிரபாகரன் (21) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, ஒரு வாள், கத்தி, 2 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள ஜெர்ஷன் 26வது வார்டு திமுக கவுன்சிலர் மரிய கீதாவின் மகன் ஆவார். தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.