கோவில்பட்டி ரயில் நிலையத்தில் விபத்து: ஓடும் ரயிலில் ஏற முயன்ற சென்னை பயணி பலி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் விபத்து: ஓடும் ரயிலில் ஏற முயன்ற சென்னை பயணி பலி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட பரிதாபகரமான விபத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற சென்னைச் சேர்ந்த பயணி உயிரிழந்தார்.

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த ரகுமான் (52), கோவில்பட்டியில் இருந்து சென்னை தாம்பரம் செல்ல முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்திருந்தார். காலை 10 மணியளவில் குருவாயூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ‘குருவாயூர் எக்ஸ்பிரஸ்’ 2வது நடைமேடையிலிருந்து புறப்பட்டபோது, நடைமேடையின் எதிர்புற தண்டவாளத்தில் இறங்கி ரயிலில் ஏற முயன்றார்.

அப்போது கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து, வலது கால் துண்டாகி, இடுப்புக்கு கீழ் பலத்த காயமடைந்தார். பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் செல்வி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக தூத்துக்குடி ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.