தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வீடுகளை இழந்த மக்கள் எதிர்ப்பு – அரசு நிலம் வழங்க கோரிக்கை

தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: வீடுகளை இழந்த மக்கள் எதிர்ப்பு – அரசு நிலம் வழங்க கோரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த தகர ஷெட்டுகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

பிரையண்ட் நகரில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கல்லூரி வளாகத்தின் 8-வது மற்றும் 10-வது தெருக்களின் மேற்கு பகுதியில் சிலர் தகர ஷெட்டுகள் மற்றும் வீடுகள் அமைத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று இரவு காவல்துறை உதவியுடன் கல்லூரி வளாகத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கல்லூரி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த தகர ஷெட்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

இதற்கு அங்கு வசித்து வந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது வீடுகளை அகற்றக் கூடாது எனக் கூறி ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஒரு பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள், மற்றொரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் வீடுகளை இழந்த மக்கள், தாங்கள் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அரசு சார்பில் அந்த நிலத்தை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பிரையண்ட் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.