காலி மனைகளை மணல் நிரப்பி உயர்த்த வேண்டும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!

காலி மனைகளை மணல் நிரப்பி உயர்த்த வேண்டும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!

தூத்துக்குடியில் காலி மனைகளில் வெள்ளநீர் தேங்காதவாறு தரை மட்டத்திலிருந்து உயர்த்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் காலி மனைகளாக காணப்படும் இடங்களை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு பொது சுகாதார விதியின் கீழ் அறிவிப்புகள் வழங்கி மழை வெள்ளநீர் தேங்காதவாறு மேற்படி மனைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என 400க்கும் மேற்பட்ட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் தற்போது வரை 90க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் தங்களது மனைகளில் மழை வெள்ளநீர் தேங்காதவாறு தரை மட்டத்திலிருந்து உயர்த்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மனைகளை தொடர்ச்சியாக கண்காணித்து மனையின் உரிமையாளர்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக காலி மனையில் தேங்கி இருந்த மழை நீரில் சிறுமி தவறி விழுந்த செய்திகள் வலைதளத்தில் வெளியானது. 

மேற்படி இடத்தினையும் மாநகராட்சி அலுவலர்கள் நேராய்வு செய்து மழைநீர் தேங்காதவாறு மணலால் நிரப்பி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மேற்படி மனையின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் காலி மனைகளின் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவிப்புகள் வழங்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.