கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது!!
கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில், சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தேடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் சடலத்தை அதே இடத்தில் கருப்பசாமி விட்டுச் சென்றுள்ளார். மேலும், போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடுவது போல் நடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.