தூத்துக்குடியில் பகல் நேரத்தில் துணிகரம்! நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு – 2 பேர் கைது, 2 பேருக்கு வலைவீச்சு!

தூத்துக்குடியில் பகல் நேரத்தில் துணிகரம்! நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறிப்பு – 2 பேர் கைது, 2 பேருக்கு வலைவீச்சு!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற வாலிபரிடம் மர்ம கும்பல் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி வி.இ. ரோடு, எஸ்.வி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த சந்திராயப்பர் மகன் ஜென்சன் (26), சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஜென்சனை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜென்சன் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உதவி ஆய்வாளர் முத்துச்செல்வி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தாமோதர் நகரைச் சேர்ந்த சேர்மகுமார் மற்றும் கருணாநிதி நகரைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒப்போ (OPPO) செல்போனும் மீட்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அந்தோனியாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (19) மற்றும் மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த சரவணன் (24) ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறை ரோந்து மற்றும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.