தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது ரூ.3 கோடி நிதி முறைகேடு புகார் – பணி இடைநீக்கம் கோரி மனு

தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது ரூ.3 கோடி நிதி முறைகேடு புகார் – பணி இடைநீக்கம் கோரி மனு

தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இணை ஆணையர் மீது பல கோடி ரூபாய் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் தா. வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தூத்துக்குடி வைகுண்டபதி கோவில் திருப்பணிக்காக ரூ.3.05 கோடி வழங்கப்பட்டும் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உட்பிரகாரப் பணிகள் முடிவடையாமல் இருக்கும் நிலையில் ரூ.80 லட்சம் செலவில் வெளிப்பகுதிகளில் கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவில் திருப்பணிக்கான மணல் காணாமல் போனது, 110-விதியின் கீழ் லஞ்சம் பெற்று தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஸ்ரீ சங்கர் ராமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான வணிக நிலம் தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாகவும் விசாரணை கோரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.