தூத்துக்குடி V.V.D. சிக்னல் பேருந்து நிறுத்தம் பரிதாபம்! கூரை ஓட்டை... இருக்கைகள் உடைப்பு... கொளுத்தும் வெயிலில் சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்!

தூத்துக்குடி V.V.D. சிக்னல் பேருந்து நிறுத்தம் பரிதாபம்! கூரை ஓட்டை... இருக்கைகள் உடைப்பு... கொளுத்தும் வெயிலில் சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட V.V.D. சிக்னல் அருகே அமைந்துள்ள மையவாடி பேருந்து நிறுத்தம் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பல இடங்களில் உடைந்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே விழுவதுடன், வெயில் காலங்களில் எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்துள்ளதால், முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூட அமர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுமட்டுமின்றி, பேருந்து நிறுத்தத்தின் அருகே பேருந்துகள் நிறுத்தாமல், சாலையின் பகுதியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, பயணிகள் பேருந்தை பிடிக்க வெயிலில் சாலையோரத்தில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடும் வெயிலில் கால் கடுக்க நின்று  பேருந்தில் ஏற வேண்டிய சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தம் நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இருந்தும், அடிப்படை வசதிகள் இல்லாமல் சிதிலமடைந்து கிடப்பது மாநகராட்சியின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த பேருந்து நிறுத்தத்தை சீரமைத்து, அனைத்து பேருந்துகளும் நிறுத்தத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.