தூத்துக்குடியில் மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்

தூத்துக்குடியில் மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 01.12.2023 முதல் ஊதிய உயர்வை அமல்படுத்தி, ஊதிய நிர்ணயம் செய்து ஓய்வுகாலப் பணப்பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு (TNEPWO) சார்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தை பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவப் பணப்பயன்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு TNEPWO மாநில துணைத் தலைவர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வை. பாலசுப்பிரமணியன், COTEE திட்டச் செயலாளர் எம். குன்னிமலையான், CITU மாவட்ட துணைத் தலைவர் ஏ. ரவித்தாகூர், ஜி. குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பணியாளர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.