பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி ரூ.46 லட்சம் மோசடி: சத்திஸ்கர் மாநிலத்தவர் கைது!

தூத்துக்குடியில் பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி அதன் மூலம் ரூ.46 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி ரூ.46 லட்சம் மோசடி: சத்திஸ்கர் மாநிலத்தவர் கைது!

தூத்துக்குடியில் பார்ட் டைம் ஜாப் என மெசேஜ் அனுப்பி அதன் மூலம் ரூ.46 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்த மாக்கன் மகன் தங்கதுரை (52) என்பவர் டெலிகிராம் ஆப் பயன்படுத்திய போது அதில் Part Time Job தேவையா என்ற விளம்பரம் வந்துள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய நபரிடம் பேசிய போது FROSCH Travel Management Company நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியன் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக அதன் சம்பந்தப்பட்ட வலைதளத்தில் Star Ratings கொடுப்பதன் மூலம் மேற்படி கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர். 

இதனையடுத்து முதலில் 1100, 1500 இலாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்து பின்பு அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து கூறும் பணிகளை (Task) செய்யும் படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து தங்கதுரை, கூறிய வளைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு(Task) பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054/- பணத்தை தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடந்த 23.05.2023 அன்று தங்கதுரையை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேற்படி இவ்வழக்கின் எதிரியான எலியாஸ் பிரேம் குமார் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் மற்றொரு எதிரியின் வாட்ஸ்அப் எண்ணை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த எண்ணை வைத்து தொழில்நுட்ப ரீதியில் விசாரணை மேற்கொண்டதில் சத்திஸ்கர் கார்பா மாவட்டம் அம்ரையபாரா பகுதியைச் சேர்ந்த மகாவீர் விஷ்வகர்மா மகன் சத்தியம் விஷ்வகர்மா (22) என்பவர் மற்றொரு எதிரி என தெரியவந்தது. 

இதனையடுத்து சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன், முதல்நிலை காவலர்கள் காளிதாஸ், பேச்சிமுத்து, திலீப், காவலர்கள் புகழேந்திரன் மற்றும் மகேஷ் ஆகியோர் அடங்கிய போலீசார் சத்திஸ்கர் மாநிலம் சென்று மேற்படி எதிரி சத்தியம் விஷ்வகர்மா (22) என்பவரை கடந்த 18.06.2023 அன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்து சத்திஸ்கர் மாநிலம் கார்பா முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவு பெற்று பின்னர் நேற்று (21.06.2023) தூத்துக்குடி அழைத்துவரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். 

மேலும் அவரிடமிருந்து ஒரு லேப்டாப், 16 மொபைல் போன்கள், 8 ஏடிஎம் கார்டுகள், 79 சிம்கார்டுகள், 22 வங்கி செக் புக், ஒரு இன்டர்நெட் மோடம், 4 பென்டிரைவ் மற்றும் 16 போலி இரப்பர் முத்திரைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு, சத்திஸ்கர் மாநிலம் சென்று எதிரியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இதுபோன்று பல்வேறு Like and Review Scam குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதனால் Like and Review Scam சம்மந்தமாக உங்களை முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு YouTube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.