வாகனங்களுக்கு விதிக்கப்படும் இ-செலான் அபராதங்களை 90 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தல்!!

வாகனங்களுக்கு விதிக்கப்படும் இ-செலான் அபராதங்களை 90 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இ-செலான் மூலம் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை 90 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "மத்திய அரசு அறிவிக்கையின் படி போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளால், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்யப்படும் வழக்குகளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்குள் தவறாது செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனம் தொடர்பான எவ்வித பணிகளும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செய்ய இயலாது.

மேலும், பரிவாகன் இணையதளத்தில் நாளது தேதி வரையில் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களது செல்போன் எண்ணை உடனடியாக பரிவாகன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதபட்சத்தில், வாகன உரிமையாளர் செல்போன் எண்ணுக்கான உரிய அத்தாட்சியுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.