விளாத்திகுளம் அருகே கொடுத்த கடனை கேட்டதால், பைனான்சியர் கொலை: போலீஸ் விசாரணை!
விளாத்திகுளம் அருகே கொடுத்த கடனை கேட்டதால், பைனான்சியர் கொலை: போலீஸ் விசாரணை!
விளாத்திகுளம் அருகே கொடுத்த கடனை கேட்டதால், பைனான்சியர் கொலை செய்யப்பட்டு காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரன்குடி கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞானபுரம் காட்டுப் பகுதியில் கார் ஒன்று நள்ளிரவு நேரத்தில் எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாக இரவுப்பணிக்கு சென்ற உப்பள தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க சென்றபோது அங்கு காரின் டிக்கியில் ஆண் சடலம் ஒன்று எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கிடந்த செல்போனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். சடலத்தை தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் வைத்தே பரிசோதனைகள் நடத்தினர். இதில் கழுத்தில் கயிறு இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான முக்கிய தடயங்கள் காணப்பட்டதை சேகரித்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சின்னசாமி மகன் நாகஜோதி (48) என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், பைனான்சியர் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகஜோதியிடம் கார் ஓட்டுநராக இருந்து வந்த மைக்கேல் ராஜ் என்பவர் 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடன் இரண்டு லட்சத்தை திருப்பி தருவதாக கூறி பைனான்சியர் நாகஜோதியை காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ன்பனான்சியர் நாகஜோதியின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடி தலைமறைவாகி இருப்பதும் முதற்கட்ட தெரியவந்துள்ளது,
இது தொடர்பாக சூரன்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.