தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. மீனவர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், தூத்துக்குடியில் கேரள மீன் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை| நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றனர்.
மேலும், கடல் பகுதியில் சுழற்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குறைவான நாட்டுப் படகுகளே ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு நேற்று கரை திரும்பின. இதனால், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வரத்து குறைவாகக் காணப்பட்டது. ஆனால், மீன் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதன் காரணமாக, மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, சீலா மீன் கிலோ ரூ.1,200, விளைமீன் ரூ. 500, ஊளி ரூ. 650, பாறை ரூ. 500 என விற்பனையாகின. சாளை மீன், முரல் ஆகியவை தலா ஒரு கூடை ரூ. 1,800 என விற்பனையாகின. வரத்துக் குறைவு என்றாலும், விலை உயர்ந்திருந்ததால் மீனவர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.