தூத்துக்குடியில் விபத்து வழக்கு தொடா்பாக உரிய நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி!

தூத்துக்குடியில் விபத்து வழக்கு தொடா்பாக உரிய நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி!

விபத்து வழக்கு தொடா்பாக உரிய நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேனியை சோ்ந்த மகேஸ்வரன் என்பவா் தனது குடும்பத்தினா் 6 பேருடன் தேனியில் இருந்து காரில் திருச்செந்தூா் கோவிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கோவை பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து, திருச்செந்தூா் அருகே மகேஸ்வரன் குடும்பத்தினா் வந்த காா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயம் அடைந்தனா்.

இதுகுறித்து மகேஸ்வரன் தொடா்ந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், மகேஸ்வரனுக்கு அரசு போக்குவரத்துக் கழக கோவை பணிமனை ரூ.17 லட்சத்து 76,695 வழங்க கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மகேஸ்வரனுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லையாம். இதனைத் தொடா்ந்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஆலன் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, கோவை பணிமனைக்கு சொந்தமான, திருச்செந்தூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து, நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனா்.