கழுகுமலை மதுபோதையில் புரோட்டா கடையில் ரகளை: வாலிபர் கைது!
கழுகுமலையில் மதுபோதையில் புரோட்டா கடையில் சாப்பிட்டதற்கு பணம் தரமறுத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் இளமாறன் (45). இவர் கழுகுமலை அரண்மனை வாசல் தெரு பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு கழுகுமலை வட்டத்தெரு பகுதியை சேர்ந்த காளிராஜ் மகன் கட்டிட தொழிலாளியான இசக்கிமாரி (31) என்பவர் வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர் புரோட்டா உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டுள்ளார் பின்னர் சாப்பிட்டதற்கு உரிய பில்லுக்கான பணத்தை ஊழியர் கேட்டுள்ளார். சாப்பிட்டதற்குரிய பணத்தை தரமுடியாது என்று கூறியதுடன், அந்த ஊழியரை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.
இதை பார்த்த மற்ற ஊழியர்களும் அவரை தட்டி கேட்டபோது, அவர்களையும் அவதூறாக பேசிய இசக்கிமாரி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் இளமாறன் கழுகுமலை போலீசாரிடம் புகார் செய்தார்.
உடனடியாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது ெசய்தனர்.