வ.உ.சி. நினைவு இல்லத்தில் அமைச்சர்கள் மரியாதை – தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: அமைச்சர் உறுதி

வ.உ.சி. நினைவு இல்லத்தில் அமைச்சர்கள் மரியாதை – தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: அமைச்சர் உறுதி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வ.உ. சிதம்பரனாரின் நினைவு இல்லத்தில், அவரது 155-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வ.உ.சி.யின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, பாரம்பரிய சிறப்புகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தனர்.

“தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரக்கூடிய காலங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும்” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான அரசாணைகள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர் பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

???? உரத் தட்டுப்பாடு – தீர்வு கிடைக்குமா?

ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதிகளில் விவசாயம் அதிகம் நடைபெறும் நிலையில், விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தயாராகி வரும் நேரத்தில் உரத் தட்டுப்பாடு மற்றும் உர விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மதன்ராஜா, விவசாயிகளின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து வேளாண்மை பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மானியக் கோரிக்கையிலும் விவசாயிகளுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“வரக்கூடிய காலங்களில் உரம் தொடர்பான பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்” என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

???? தண்ணீர் பிரச்சனைக்கும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, நீர்வளப் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நீர்வளப் பிரச்சனை நிலவி வருவதாகவும், அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதாகவும் கூறினார்.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பரவலாக கிடைக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.