ஆறுமுகநேரி அருகே மனைவி மீது சுடு நீரை ஊற்றிய கணவர் தற்கொலை!

ஆறுமுகநேரி அருகே மனைவி மீது சுடு நீரை ஊற்றிய கணவர் தற்கொலை!

ஆறுமுகநேரி அருகே மது அருந்த பணம் தர மறுத்த மனைவி மீது சுடு தண்ணீரை ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழ நவலடிவிளை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கனகராஜ் (52). சமையல் தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கனகராஜ் தற்போது குடும்பத்தினருடன் ஆறுமுகநேரியில் உள்ள எஸ்.எஸ். கோவில் தெருவில் வசித்து வந்தார். மூத்த மகன் கமலரோசன் (22) ஆறுமுகநேரியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

கனகராஜூக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. லட்சுமி கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கனகராஜ் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவர் பணம் இல்லை என்று கூறியதால் சமையலுக்காக அடுப்பில் வைக்கப்பட்டு இருந்த சுடு தண்ணீரை எடுத்து லட்சுமி மீது ஊற்றியுள்ளார். இதனால் படுகாயமடைந்த லட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் திருந்தாத கனகராஜ் நேற்று முன்தினம் இரவு தனது மகன் கமலரோசனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். 

தாயின் மருத்துவ செலவுக்கே நான் பணம் இல்லாமல் சிரமப்படுகிறேன். அதனால் என்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு கமலரோசன் தூங்க சென்றுவிட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது கனகராஜை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த கமலரோசன் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்ல முயன்றார். அப்போது மாடிக்குச் செல்லும் இரும்பு ஏணிப்படியில் கனகராஜ் தனது மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி போலீஸ் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கனகராஜின் பிணத்தை கைப்பற்றி காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.