தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு : உங்கள் எஸ்.ஐ கனவை நினைவாக்க ஓர் அரிய வாய்ப்பு..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் TNUSRB- SI போட்டித் தேர்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க. இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநில அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB -SI) 1299 சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி இளங்கலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2025 ஆகும். கூடுதல் விவரங்களை https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 23.04.2025 (புதன் கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட்போர்டு வைத்து நடத்தப்படும். மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 0461 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNUSRB-SI தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்
துள்ளார்.