மேல‌ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் பங்கேற்பு!!

மேல‌ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்: அமைச்சர் பங்கேற்பு!!

தூத்துக்குடி மாவட்ட‌ம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேல ஆத்தூர் ஊராட்சியில் இன்று (08.06.2025) கால்நடை பராமரிப்புத்துரை சார்பில் நடைப்பெற்ற‌ சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துடை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்க‌ள், மாவ‌ட்ட ஆட்சிய‌ர் க.இளம்பகவ‌த், தலைமையில் துவ‌க்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 2025-26-ம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் இன்றைய தினம் மேலஆத்தூர் ஊராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இன்று முதல் 26.03.26 வரை ஒரு ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுபோன்று, தமிழ்நாடு முழுவதும் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது, இம்முகாமில், கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சையும் அது சம்பந்தமாக ஏற்படக்கூடிய நோய்களையும் எவ்வாறு தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை கால்நடை வளர்ப்பு இடத்தில் விவசாயிகளுக்கு ஏற்படுத்துவதற்காக இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான அளவுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், புதிதாக நோய்களும் உருவாக்கி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் பாரம்பரியமாக கால்நடை வளர்த்து வருகிறார்கள். கால்நடை வளர்ப்பது மூலமாக இயற்கையான உரம் மற்றும் பால் போன்றவையும் கிடைக்கிறது. குறிப்பாக, மனிதர்களுக்கு உடல்நலம் சரி இல்லாமல் இருந்தால் வாகனங்கள் மூலமாக மருத்துவமனைக்கு எளிதாக சென்றுவிடலாம். ஆனால் கால்நடைகளை அழைத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்படும். எனவே, கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று சேரும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு கிராம ஊராட்சிகளில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு, கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இது போன்ற முகாம்கள் மற்றும் கால்நடை மருந்தகங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல் கட்டுதரையையும் சுத்தமாக இருந்தால் தான் நோய்கள் தாக்காமல் இருக்கும். குறிப்பாக, மழை காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கால்நடைகளை பாதுகாத்து உழவுத்தொழிலையும், கால்நடை வளர்ப்பு மூலமாக பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டும்மல்லாமல், இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவைசிகிச்சை போன்ற சில அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர்கள் பதிலளிப்பார்கள்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1.23 இலட்சம் மாடுகளும், 5.67 இலட்சம் ஆடுகளும் உள்ளன. இவற்றில் மேலஆத்தூர் கிராமத்தில் 1150 மாடுகளும், 2150 ஆடுகளும் உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் இதுவரை 720 சிறப்பு கால்நடை மற்றும் சுகாதார  விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. நடப்பு வருடத்தில் 144 முகாம் நடைபெற உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமான கால்நடைகளை வளர்த்து, தங்களது பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், நமது மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து, பல்வேறு முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, பெண்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தினை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேம்படுத்துவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கிய எண்ணமாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக எங்களுடைய கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர்கள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் நன்கு பயன்படுத்திக்கொண்டு, நோயில்லாத ஆரோக்கியமான கால்நடைகளை வளர்த்து தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முகாமில், கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய வேலி மசால், தீவனச்சோளம், அகத்தி உள்ளிட்ட பசுந்தீவனங்கள் குறித்தும், கால்நடைகளை வெள்ளைக் கழிச்சல் நோய், துள்ளுமாரி நோய், மடி நோய், கோமாரி நோய், கருச்சிதைவு நோய் மற்றும் பறவைக்காய்ச்சல் நோய் உள்ளிட்ட நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குடற்புழு நோய்கள் வராமல் தடுப்பதற்கான மருந்துப்பொருட்கள் மற்றும் குடற்புழு நீக்க மருந்துகளை மாடுகளுக்கு ஒருவருடத்திற்கு ஒரு முறையும், ஆடுகளுக்கு குறைந்தது இரண்டு முறையும் வழங்குவது குறித்தும், கால்நடைகளின் உடல் ஆரோக்கிய இன அபிவிருத்தி மற்றும் பால் உற்பத்திக்கு உரிய அளவீடுகளில் தாது உப்புக் கலவை வழங்குவது குறித்தும், கால்நடைகளுக்கு வழங்க வேண்டிய கலப்புத் தீவனம் மற்றும் தானியவகை உணவுகள் குறித்தும், கால்நடைகளுக்கு சுண்ணாம்புச் சத்து குறைபாடு, மடி நோய், வலி நிவாரணி, சினைப்பிடுப்பதற்கான தாது உப்புக் கலவைகள் உள்ளிட்ட தடுப்பு மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் அமைக்கப்பட்ட கருத்துக் கண்காட்சியினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் பார்வையிட்டார்.

மேலும், 3 கால்நடை வளர்ப்போருக்கு சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகளையும், 3 கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகளையும் மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலமாக 7 பயனாளிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் கால்நடை பராமரிப்புக் கடனுதவிகளும், ஏற்கனவே, கால்நடை பராமரிப்புக் கடனுதவியாக தலா ரூ.60 ஆயிரம் பெற்று, பசுமாடு வாங்கிய 2 பயனாளிகளுக்கு கால்நடை தீவனங்களையும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்திய கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டு, கால்நடை பராமரிப்பு தொழிமுனைவோர் பயிற்சி பெற்ற 11 கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர், திருநங்கையருக்கான திறன் பயிற்சி சான்றிதழ்களையும் மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) மரு.சு.சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) மரு.ரா.ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ், உதவி இயக்குநர்கள், கால்நடை மருத்தவர்கள், அரசு அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.